தமிழர்களை மீண்டும் வம்புக்கு இழுக்கும் கேரள அரசு


'நீ நெல் கொண்டுவா... நான் உமி கொண்டுவருகிறேன். இரண்டையும் கலந்து, சமமாகப் பங்கிட்டு... ஊதி ஊதிப் பசியாறலாம்' என்றானாம் ஓர் அதிபுத்திசாலி. அதாவது, 'சதி புத்திசாலி’! முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்துவதால் அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று நிபுணர்களும் நீதிமன்றமும் சொன்ன பிறகும்கூட, தமிழ்நாட்டின் தாகம் தீர்ந்துவிடவே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அநியாய அரசியல் செய்யும் கேரளத்து முதல்வர் உம்மன் சாண்டியும் அப்படி 'சதி புத்தி’யைத்தான் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி ஆகப்போகும் மின்சாரத்தில், சுளையாக 500 மெகா வாட் கேரளத்துக்கு வேண்டுமாம்... பிரதமருக்குக் கடிதம் எழுதி இருக்கிறார் சாண்டி.

மின் தட்டுப்பாட்டால் ஏற்படக்கூடிய இழப்புகளில் இருந்து மீள்வதற்கு வேறு வழியே தெரியாமல்... எத்தனையோ எதிர்ப்புகளையும் மீறி... தன்னையே பணயம்வைத்துத்தான், மத்திய அரசு கொண்டுவந்த கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு ஒப்புதலும் ஒத்துழைப்பும் கொடுத்திருக்கிறது தமிழ்நாடு. அப்படி இருக்க... பசுவின் வாய் இருக்கும் முன் பாதியைத் தமிழகத்திடம் கொடுத்து, தீனி போடச் சொல்லிவிட்டு... பால் மடிகொண்ட பின் பாதியைத் தனக்குப் பங்காகத் தரும்படி துளிகூட வெட்கம் இன்றிக் கேட்கிறார் கேரளத்துப் பங்காளி!

மத்தியிலும் கேரளத்திலும் ஆள்வது காங்கிரஸ்தான் என்பதால், இதில் வேறுவிதமான அரசியல் விளையாட்டுகளும் இருக்குமோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. கூடங்குளத்தில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை முழுமையாக தமிழகத்துக்குத் தராமல் தவிர்க்கவே, இப்படி சாண்டியைத் தூண்டி சண்டித்தனம் பண்ணும்படி சிண்டு முடிகிறதோ மத்திய அரசு?

சராசரியாக தினம் எட்டு மணி நேரம் மின்வெட்டால் முடங்கிப்போகும் தமிழகத்தின் வலியை, அரை மணி நேரம் மட்டுமே மின் வெட்டைச் சந்திக்கும் கேரளத்துக்கும் மத்திய அரசுக்கும் உரிய முறையில் 'இடித்துச் சொல்லி'ப் புரியவைக்க வேண்டியது தமிழக முதல்வரின் கடமை!



Comments

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

கலாய்ச்சுட்டாராமாம்...

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்